Saturday, 9 June 2012

Bio-Weapon Marrisson(பகுதி-1)

"இஸ்தாபுல் எங்க? இஸ்தாபுல்.... Call him immediately.. அந்த கனெக்டர் எங்க? நேரம் கடக்குது.. " என்று கத்திக்கொண்டிருந்தார் மேரிசன்.

காலை நேரத்தில் அடிவயிற்றில் உண்டான வேதியல் மாற்றத்தால் கழிவறையில் தஞ்சம் புகுந்திருந்த இஸ்தாபுல் அவசர அவசரமாக பேண்டை பாதி மாட்டியும் மாட்டாமல் நொண்டிக்கொண்டே மேரிசனை நோக்கி ஓடி வந்தான். அவனை கண்டதும் மேரிசன்,

''இஸ்தாபுல்.. கனெக்டர் எங்கே...? Give me soon..."

''கனெக்ட்... கனெக்ட்.. எந்த கனெக்டர் சார்...?''

'ச்சோ... அச்சச்சோ... கனெக்டர் மறந்துடுச்சா சார்க்கு... ஹே இடியட்... தி டீஹைட்ரேடிங் கனெக்டர்...''

''அது... அது...............''

''வாட்.. என்னயா... அதையும் க்ககூஸ்ல போட்டுட்டியா? அங்க போட வேண்டியத மட்டும் போட வேண்டியது தானே...''

''ஆங்.. அத அந்த டேபில் ட்ராயர்ல தான் வச்சிருக்கேன்...''

''ஓ... ஹவ் ஸ்வீட் யு ஆர்... இப்ப நான் போயி அத எடுத்து கனெக்ட் பண்ணவா? அதுக்கு தான் உனக்கு சம்பளம் குடுத்து உக்கார வச்சிருக்கேனா? இடியட்.. போய் கனெக்ட் பண்ணு...'' என்று இஸ்தாபுலிடம் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் போனார்.

உள்ளே சென்று ஒரு பட்டனை தட்டியதும் ஒரு Chair மேரிசன் நின்ற இடத்திற்கு வந்தது. அதில் அமர்ந்துகொண்டார். மிகவும் சுவையான கோனா பியாபெர்ரி காபி ஒரு பெரிய ஜக்கில் அவர் கையில் வந்தது. விஞ்ஞானமும் ஒரு மந்திரமே... விஞ்ஞானிகள் ஒரு மந்திரவாதியே என்று மேரிசனின் தந்தை அவரிடம் அடிக்கடி சொல்வார். விஞ்ஞானியாகிறேன் புதிதாக கண்டுபிடிக்கிறேன் என்று மேரிசன் திரிவது அவரின் தந்தைக்கு சிறிது வருத்தமே. வீட்டை கவனிக்கவில்லை என.

''மந்திரவாதினா பரவால.... நான் சாமியார் இல்லயே...'' என்று மேரிசன் கிண்டலாக சொல்ல, இருவரும் சிரித்துவிட்டு பின்னர் வேலையை பார்ப்பர்.

காபியை குடித்துக்கொண்டே பழையதை நினைத்து புன்னகைத்து கொண்டிருந்தார் மேரிசன். திடீரென்று 'டொம்..' என சத்தம் கேட்டது. திடீரென கேட்ட சத்தத்தால் பரபரவென்று கிச்சனை விட்டு வெளியே வந்தார் மேரிசன்.
அங்கே இஸ்தாபுல் திரு திருவென விழித்துக்கொண்டிருந்தான்.

''என்ன.. என்ன.. என்னயா பண்ணின...''

''அது.... அது.... டீஹைட்ரேடிங் கனெக்டர என் சூட்டோட கனெக்ட் பண்ணி பாத்தேன்... இழுத்துடுச்சு...''

''நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்கமாட்டியே இஸ்தாபுல்?''

''எஸ் சார்... நீங்க கேட்டா சொல்லவேண்டியது என் கடமை சார்....'' என்று முறுக்கிகொண்டு நேராக பார்த்து மிலிட்டரி ஆபிஸர் போல நின்றான் இஸ்தாபுல்.

''நான் கேக்க நினச்சது என்னனா.. குறை மாசத்துல பொறந்தவனா நீ??''

''சார்....''

''சட் அப்... யு ப்ளட்டி... என்ன மேன் நினச்சுட்டு இருக்க.. என் மொத்த சொத்தும் இந்த ப்ராஜெக்ட் தான்... இடியாடிக் வேலையெல்லாம் பண்ணாத இங்க...''

''சாரி சார்... பட் நானும் 5 வருசமா உங்க கூட இருக்கேன்... என்ன பண்றீங்கனே புரியல கொஞ்சம் விளக்க முடியுமா...?''

''அப்பா... 5 வருசமா நீயும் கேப்பனு தான்யா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.... 5 வருசமா என்ன பண்றோம்னு தெரியாம நீயும் பண்ணிட்டு இருந்திருக்க...''

ஈ.. என்று பல்லை இளித்தவாறு நின்றவனை இழுத்து ஒரு கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் குரங்கை காண்பித்து.

''இது மேடிசன். இந்த மேரிசன்னோட தம்பி போல. இவன் தான் என்னோட எல்லாம். இந்த கண்ணாடி டம்பளர் உள்ள விதவிதமான இன்சக்ட்ஸ் இருக்கு. குரங்கு வாயிலிருந்து வர்ற காத்துல கன்டாமினேடட்.. அதாவது அசுத்தமான ஆக்ஸிஜன் இருக்கும்.. ஆக்ஸிஜனே சுத்திகரிக்கப்பட்ட காற்று தானே... அது என்ன அசுத்தமான ஆக்ஸிஜன். அப்ப அது ஆக்ஸிஜனே இல்ல. பட்.. அந்த காத்து இன்சக்ட்ஸ் கூட பரவும்போது தே கேன் சர்வைவ்... பட் சேம் திங்... உடம்புல வாட்டர் கன்டன்ட்ஸ் இல்லாம பரவுற ஆக்ஸிஜன் ஒரு விசமா ஆகலாம்....''

''அது எப்படி... எனக்கென்ன ஒண்ணுமே தெரியாதா?''

''யோவ்.. இருயா... முழுசா கேளு... குரங்குங்க என்ன விரும்பி சாப்பிடும்...? வாழைப்பழம்... அந்த வாழைப்பழத்துல அதிகமா மாய்ஸ்டர்.. அதாவது ஈரப்பதம் இருக்கும்.. அதுல இருந்து கேரோடீன், ஃபுட் எனர்ஜி, கார்போஹைட்ரேட் அதிகமா கிடைக்கும்னுலாம் எல்லாருக்கும் தெரியும். பட் இத தாண்டி ஒரு கன்டன்ட் அதிகமா கிடைக்கும்..  அது ஆஸ்கார்பிக் ஆஸிட்... அந்த ஆஸ்கார்பிக் ஆஸிட் அதிகமான அது ஆக்ஸிஜனுக்கு எதிரான காற்றை உள்ளுக்குள்ள உருவாக்கும்... ஒண்ணு இல்லாத இடத்துல அத எதிர்க்குற சக்தி அதிகமான என்ன ஆகும்? எஸ் எஸ்... வரட்சி... உடம்புல வரட்சி வரும்போது அதுக்காக சாப்பிடுற அத்தனையும் வரட்சியே உண்டாக்கிட்டு இருந்தா என்ன ஆகும்?''

''என்ன சார் ஆகும்???''

''ஆமாம் யா.. உனக்கு எதுவுமே புரிஞ்சிருக்காதுனு இதுவரைக்கும் சொன்னதே பெரிய விசயம்.. இதுக்கு மேல சொல்லி உனக்கு எதனா புரிஞ்சுப்போச்சுனா நீ எனக்கே ஆப்பு வச்சிடுவ...''

''சே... என்ன சார்.. நான் அப்படிபட்டவன் இல்லசார்... சரி... நீங்க சொன்னதெல்லாம் குரங்குகிட்ட பண்ணபோறீங்கனு புரியுது.. பட்.. இந்த பாட்டில்ல இருக்குற இன்சக்ட்ஸ்லாம்..??''

''இவுங்கலாம் நமக்காக உயிர்தியாகம் பண்ண போறவங்க....''

''ஓ... குரங்க வச்சு... அதோட மூச்ச இந்த இன்சக்ட்டுக்கெல்லாம் விஷவாயுவா யூஸ் பண்ண போறீங்க.... அப்படிதானே...??''

''அடடா.. புரிஞ்சிடுச்சா.. இன்னைக்கே அத எச்சில் தொட்டு அழிச்சிடு...'' என்று மேரிசன் சொன்ன அடுத்த நிமிடம் தலையை சொரிந்துகொண்டு சிரித்தான் இஸ்தாபுல்.

---

பின்பு ஒருநாள்...

இருக்கையில் அமர்ந்தவாறு உரங்கிகொண்டிருந்தான் இஸ்தாபுல். உள்ளிருந்து ஒரு சப்தம்..

''காட் இட்... ஐ காட் இட்...'' என்று.. திடுக்கிட்டு எழுந்தான் இஸ்தாபுல். அய்யோ.. எதுவோ ஆயிடுச்சு போலவே.. ஒருவேலை போயிருப்பாரோ.... நாம எப்படி அடுத்து இந்த லேப் முழுசுக்கும் தலைமை ஏத்துகிறது என்று மனதினுள்ளே யோசித்துகொண்டு உள்ளே சென்றான். அங்கே ஆழ்ந்த மகிழ்ச்சியில் மேரிசன் நின்றுகொண்டிருந்தார்.

இஸ்தாபுல் உள்ளே வருவதை கண்டதும் ஓடிவந்து இஸ்தாபுலை கட்டி அணைத்து உதட்டோடு உதட்டில் முத்தம் கொடுத்துவிட்டார். சடாரென்று தள்ளிவிட்டு.. எச்சிலை துப்பிக்கொண்டே இஸ்தாபுல்..

''யோவ்.. பெரிய மனுசன்னு மதிப்பு கொடுத்தா.. என்ன காரியம்.. து.. து.. உவ்வே... பினாயில் ஊத்தி கழுவனும்.. து.. து..''

''டே... நான் கண்டுபுடிச்சுட்டன்... மேடிசன் மூச்சுகாத்து போனதும் அந்த பாட்டில்ல இருந்த இன்சக்ட்ஸ் எல்லாம் செத்துபோச்சுடா..''

''இங்க என் வாழ்க்கையே போச்சே... என் லவ்வர கூட நான் இதுவரைக்கும் உதட்டுல... அய்யோ...''

''இத்தன நாளா... என் உழைப்புக்கெல்லாம்... சூப்பர்டா... நாம சாதிச்சுட்டோம்...'' என்று ஒருபுரம் மேரிசன் கத்திக்கொண்டிருக்க. நாற்காலியில் ஒற்றை காலை வைத்து ஒரு காலை தொங்கலில் விட்டு தலையில் கையை வைத்துக்கொண்டு மறுகையால் உதட்டை தடவிக்கொண்டே...

''போச்சு... எல்லாம் போச்சு... போயும் போயும் என் கற்ப ஒரு ஆம்பளைகிட்டயா இழக்கணும்.... போச்சு...'' என்று புலம்புகொண்டிருந்தான் இஸ்தாபுல்.

ஆனால் இந்நேரத்தில் அந்த மேடிசன் குரங்கு இறந்துபோயி கிடந்தது. அதை கண்ட மேரிசன்,,

''அய்யோ.. நான் ஒண்ணுமே பண்ணலையே... பயோ வெப்பனா யூஸ் பண்ற ஒண்ணு ஒருமுறைக்கு மேல யூஸ் பண்ண முடியாம இறந்துபோனா.. அய்யோ அது கண்டுபிடிப்பே இல்லயே... என்ன பண்ணினேன்... டீஹைட்ரேட் பண்ணினேன்.. வாழைபழத்துல இருக்குற ஈரபதம்.. வாட்டர் கன்டன்ட்ஸ்லாம் ரிமூவ் பண்ணிட்டு சாப்பிட கொடுத்தேன்... இது எந்த சைடு எஃபெக்ட்ஸூம் இல்லாம இருக்கானு பாக்கதானே இத்தன காலம் ஓடுச்சு.. இது எப்படி..?'' என்று தனக்குள்ளயே யோசித்துக்கொண்டு குழம்பிபோயிருந்தார். ஆனால் அந்த பக்கம் இஸ்தாபுல், கன்னத்தில் கை வைத்து விட்டத்தை பார்த்து.. மெது மெதுவாக..

''போச்சு.. எல்லாமே.. எல்லாமே போச்சு..'' என்று புலம்பிகொண்டிருக்க...

''எஸ்.. எஸ்... உடம்புல ஆக்ஸிஜன் கன்டன்ட்ஸ் கம்மியானா அது சொந்த உடம்பையும் தானே அழிச்சிடும். இத எப்படி நான் யோசிக்காம போனேன்... எஸ்... ஆக்ஸிஜன் ஏத்தி ஏத்தி அத டீஹைட்ரேட் பண்ணனும்...'' என்று யோசித்துக்கொண்டே இஸ்தாபுலிடம் வந்தார்.

''இஸ்தாபுல்.. இஸ்தாபுல்...'' என்று அழைக்க.. இஸ்தாபுலோ விட்டத்தை பார்த்துக்கொண்டே,

''ம்ம்.. ம்ம்... எல்லாமே போச்சு..'' என்றான்.

''டே... கவர்மன்ட் அப்ரூவல் அண்ட் யூசேஜ்காக டெமோ அரேஞ்ச் பண்ணிருக்கேன்டா.. இனிமே ஒரு விலங்க வாங்கி ட்ரெயின் பண்ண முடியாதுடா... இதுவரை கூட இருந்த உன்னையே டெமோக்கு யூஸ் பண்ணிக்கவா?''

''ம்ம்... வாழ்க்கையே போச்சு... இதுக்குமேல எதுக்கு யூஸ் பண்ணினா என்ன?''

''மேடிசன் இறந்துட்டானே உனக்கு பயம் இல்லயா? நான் பாத்துகுறேன் டா.. மாத்து மருந்து உருவாக்கிடுவேன்.''

''ம்ம்.. எனக்கு பயம் இல்ல...''

''தேங்க்ஸ்டா.....'' என்று மீண்டும் அணைக்க அருகில் வந்தார் மேரிசன்.

''யோவ்... மரியாதையா போயிடு... வேற எதனா அசிங்கமா சொல்லிட போறேன்...'' என்று இஸ்தாபுல் மிரட்ட... அவர் எண்ணம் நிறைவேறிய சந்தோச மகிழ்ச்சியில் சுத்தி ஓடிக்கொண்டிருந்தார்.

''உண்மை தெரியாம பயப்புள்ள எப்படி நிக்குது பாரு...'' என்று முணுமுணுத்துக்கொண்டே ஓரமாக சிரித்துக்கொண்டான் இஸ்தாபுல்.

---

(தொடரும்)

Saturday, 19 May 2012

களவாடி கருவட்டியாம்பள

"எலே.. கருவட்டியாம்புள... கருவட்டியாம்புள... எந்திருயம்ல... ராவுல கண்ண மூடிகிட்டு உறங்குராப்புல நடிக்காதம்ல.. ரவைக்கு மாமன் வர்ணம்னுச்சுல.. எந்திருயம்ல...''


தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்த கருவட்டியாம்பளையை தட்டி எழும்ப செய்ய முயற்சித்து கொண்டிருந்தாள் சின்னதயிரியாள்.

''உறங்கிப்புட்டவன எழுக்கலாம்.. உறங்காம உச்சந்தலைய நக்குறாம்பளைய எங்கிட்டு எழுக்க.... உவ்வட ஆத்தானு சொல்லிட்டு நடுவீதியில நடக்கையில சொந்த மருவாதையும் மச்சுகொட்டி போயிபோச்சு.. மாமன் பாவம் பாத்து... வந்து மருவாத காக்க வாரசொன்னா... நீ நடிச்சுட்டு கிடக்க... போ.. நான் உசுர மாச்சுட்டு போனா பின்னதான் பொசுகிட்டு வருவ.. போறாம்ல... போறம்..'' என்று புலம்பலை கேட்டு சலித்துக்கொண்டே எழுந்தான் கருவட்டியாம்புள.

மாறுபக்கம் திரும்பி உக்காந்து உச்சஞ்செவுரு பாத்திருந்த சின்னதயிரியாளிடம்,

''ஆத்தாயி... ஏமே.. ஆத்தாயி.. இந்தா... எனக்கு இச்செய்யி விரும்பம் அக்குது ஆத்தாயி...'' என்று தலையை அரிச்சுக்கொண்டே சொன்ன மாத்திரத்தில அதிர்ச்சியில சின்னதயிரியாள் எழுந்து..

''குலத்த சீரயிழிக்க வந்தாயியா...?? மாருபோட அப்பனில்லனு மச்சியில சேரவுடாம.. என் சீலையாண்ட சொருகி வச்சனில்ல... பொட்டச்சியா வளந்துட்டியா...?'' என்று இடைவிடாது கோவத்துல பொங்கி எழுந்து புலம்பிகொண்டிருந்த சின்னதயிரியாளை தலைகுனிந்து கவனித்துகொண்டிருந்தான் கருவட்டி. பேச்சருத்து இருந்தவனின் அருகில் சென்று சின்னதயிரி,

''ஏலே.. இங்கிட்டு பாருயம்ல.. நீ சின்னதாம்ல இருக்கயில நான் ரவிக்கைய போடாம சீலை கட்டியப்புல அடிக்கடி நீ கேப்ப.. ஏன் அத்தாயி ரவிக்க போடலனு... இப்ப சொல்லுதாம்யா.. உவ்விட அப்பன் உன்னதாயிதான்.. தொழில சரியா செய்யாத போக எனை ரவிக்க போடாம வச்சுபுட்டாயிங்க.. கட்டுனவன் போனபின்ன ரவிக்கை போடகூடாதும்னு முல்லையாண்ட பேச்சுண்டு... அந்த அச்சுதாம்ல நம்மிடயும்.. தொழில சரிதாக்க செய்யலனா.. கட்டுனவன் இருந்தும் இருக்காதாப்புல தாம்ல.. அதாம்ல ரவிக்கைய லவகூட தொடாம போனேன்... என்னட ஆற்றாயி, அழுகாச்சி எம்மிட வர்ற மருமொவளுக்கு வேணாம்யா.. வேணாம்..'' என்று கண்ணோரமாய் கண்ணீர் கொப்பளித்து நிற்க.. அவள் கண்ணீரை துடைத்துகொண்டே கருவட்டியாம் பேச தொடங்கினான்.

''ஆத்தாயி... தப்பு ஆத்தாயி.. தப்பு.. நாம செய்யாண்டு கிடக்குதாம்ல.. எல்லாமே தப்பு ஆத்தாயி..''

''எதுயம்மே தப்பு.. இது மரவுய்யா.. இது மரவு.. நாம பாலைகாரவங்க... பாலையண்டா என்னா தெரியுதாம்யா... அங்கிட இங்கிட பிச்சுண்டு வாழுதாம்யா... நாம தமிழ்பாலையா.. மானமுடையாருங்க... ஆனா மானமுட்டு பிச்சுண்டு சாப்பிடுறோம்யா.. வேற தொழில் கிடையாதும்யா.. கிடையாது..''

''ஆத்தாயி... ஊரு செய்யட்டும் ஆத்தாயி.. நாம வேணாம்.. நாம இந்த பாலைய வுட்டு போயிடுவோம்...எங்கிடாச்சும்...'' என்று சொல்ல.. சின்னதயிரி கோபம் கொண்டு அவன் முதுகில் இரண்டு கொத்து கொத்தி.. முடியை வாரி இழுத்துக்கொண்டு...

''ஏலே.. உலகம் தெரிதாம்ல? உமக்கு உலகம் தெரிதா? எவ்வட ஊருல இருந்து எவ்விட ஊருக்கு போறது? மத்த வூரு காரியங்களா நீ முட்டுல நின்னா உம்மைய மடியில சேத்துகிடுவாயிங்கனு நினப்பா..?''

''தெரியிது ஆத்தாயி... நான் முல்லைக்கோ நெய்தலுக்கோ அழைக்கல ஆத்தாயி.. குறிஞ்சிபோவோம்... குறிஞ்சியில நம்மிட வாழ்க்கை வாழலாம் ஆத்தாயி.. குறிஞ்சியில சேத்துகிட வாய்ப்பிருக்கு.. வழியிட வந்தாரை குறிஞ்சி ஏத்துக்கும் ஆத்தாயி,,''

''என்னதாம்ல பேசுற... என்ன பேசுற... தெரியுதாம்ல.. தெரியுது.. அங்க சுனையாண்ட தவளையொன்னு மாருகெட்டு கவுந்துச்சு... இப்ப புரியுது சகுனம்.. நீயுதாம்ல அந்த கெட்டத கட்டி வந்த சகுனம்... பிறந்து வளர்ந்து சாதி சனம்... எப்படியாம்ல வுட்டு போறது.. மாருதட்டி சாஞ்சிடுவன்யா.. மேல பேசாத..''

''என்ன ஆத்தாயி.. வாயிவிட்டாலே மாச்சுக்குறேன்னு தான் பேச்சா... போறேன் ஆத்தாயி.. போயி மாமனான்ட தொழில பழகுறன்.. பின்ன நான் களவாண்டு வாரதெல்லாம் கவட்டையில வச்சு கொழுத்துக்க.. போறேன்.. போறேன்...'' என்று கோவத்துல கொப்பளிச்சுண்டே தரையில இருந்த துணிய இடுப்புல கட்டிகிட்டு ரவ உணவில்லாம மாமன தேடி போயிட்டாம்புள...!

(தொடரும்)


--
ஷோ.ரா

Friday, 11 May 2012

மனைவி

என் உயிருக்கு உயிரானவள். என்னை என் வாழ்வை இருபது வயதில் இருந்து செதில் செதிலாய் செதுக்கி எனை உருவகம் படுத்தியவள். என் வாழ்வை அலங்கரிக்க வந்த தேவதை. எத்தனையோ உயிரற்ற,ஒரு உருவகம் செய்ய முடியாதொரு சூழலில் கூட அவளது குழந்தை போன்ற முகத்தினை பார்த்தால் ஒரு நிமிடம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை குளிர்ந்து எந்தவகையான சூழலையும் சமாளிக்கும் தைரியம் பிறந்துவிடும்.


இன்னும் நினைவுகளில்... அன்று அவளிடம்.. அவளது வீட்டில் உள்ளே நுழைய முடியாமல் இருந்த போது.. எல்லோரையும் முட்டிக்கொண்டு உள்ளே சென்று அந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு.. அவளது கோபகார அப்பாவை பார்த்து நான் ஒரு வித தைரியத்தோடு.. உங்கள் மகளை எனக்கு தாருங்கள்.. நான் காப்பாற்றுவேன்.. அவள் தான் எனக்கு உயிர்.. என்று நான் பேச பேச.. உள்ளே நாணம் கொண்டு பயந்துகொண்டிருந்த என் தேவதை கொஞ்சம் கொஞ்சமாக தலையை நீட்டி பயம் தெளிந்து எனது பேச்சின் முடிவே ஓடி வந்து என் கையை இருக பற்றிக்கொண்டாள்.

என் குழந்தை தேவதைக்கு எங்கிருந்து அவ்வளவு தைரியம் வந்தது. அவள் அப்படிபட்டவள் இல்லையே...! எங்கிருந்து அப்படியொரு பூச்சரமாய் என்னை கைபற்றி கொண்டாள். ஒரு நிமிடம் பிரமித்து என் கையை இறுக பற்றியிருந்த அவள் கையூடே சேர்ந்த முகத்தை பார்த்தேன். என்ன ஒரு ரம்மியமான முகம். என்றும் இல்லாமல் அன்று கொஞ்சம் கூடுதல் அழகாய் என் தேவதை.

ஒரு மிடுக்கு. கொஞ்சமாக இருந்த தைரியம் பீறிட்டு சிதறி அதிகமாக உருவெடுத்தது. தோளை உயர்த்திக்கொண்டு அவளது தந்தையை நோக்கி கேட்டேன், ''என் மனைவியை எனக்கு தருவீர்களா என்று...''. அதிகம் கோபம் கொள்ளும் என்னை அவளது குடும்பத்தார் உசுப்பிவிட மறக்கவில்லை. அதீத வார்த்தைகளில் ஏச்சுகள். அந்த ஏச்சு எதுவும் என் காதில் விழவில்லை. அந்த ஓரத்தில் பதறி நின்றிருந்த என் சின்ன தேவதை முக பாவனைகள் முன்னிலையில் அது ஒன்றும் மெய்யில்லா பொம்மை சத்தமாகவே என் காதில் பாய்ந்தது.

அவளை தவிர என்ன வேண்டும். அவள் மட்டும் போதுமே...! என்ற எண்ணம் எங்கிருந்து வந்ததோ..! அவளே எல்லாமுமாய் ஆகி.. இன்று அவளே என்னவளுமாய்... என்றென்றும் என்னவளாய்...!

இன்னும் வேறென்ன வேண்டும் என்று அன்று திருமண பந்தலில் அவள் கையை இறுக பற்றிக்கொண்டு நான் நடந்த நடையில் என் கையை பிடித்துக்கொண்டு முன்னே பார்க்காமல் என்னை மட்டும் பார்த்துகொண்டு என்னை நம்பி நான் சரியாக வழிநடத்துவேன் என்று நம்பி அன்று மண்டபத்தை விட்டு வெளியே வந்த என் தேவதை இன்று வரை இன்னும் என் வாழ்க்கையில் என்னை நம்பியே என் கையை பிடித்தே வந்துகொண்டிருக்கிறாள்.

என்னையே எல்லாவற்றிர்க்கும் சார்ந்து இருக்கிறாயே...! நான் ஒரு நாளில் இல்லையென்றால் நீ என்ன செய்வாய்... எல்லாவற்றையும் நீயும் கற்றுக்கொள் என்று சொல்கையில்.. ''போடா... நீ இல்லையென்ற ஒரு நொடி முன்பு நான் இல்லையென ஆகிவிடும்...'' என்று செல்லமாக சொல்லிவிட்டு என் கையை தோளில் சாய்ந்துகொண்டாளே...!

நமது பிள்ளைகாக நீ இருக்க வேண்டுமே என்றேன்.. அப்போது அவள் சொன்னது ஒரு தாயாக யாரும் சொல்லிட மறுப்பது. எனக்கு பிள்ளை முக்கியமில்லை. அவனுக்கு ஒரு தாயாக நான் செய்ய வேண்டியதற்கு உங்களிடம் இருந்து கற்பதற்கு ஒன்றுமில்லை.... ஒரு தாயாக அவனுக்கு செய்ய வேண்டியதை செய்துவிட்டு நான் உங்களுடனே வந்திடுவேன்... ஒரு தாய் அவனுக்கு தேவைபடுவது 5 வயது வரை தான் என்றாள். இல்லை..........! அப்படி ஒருபோதும் இல்லை. இது அவளுக்கும் தெரியும். ஆனால் என் மீது அவள் வைத்திருந்த பாசத்தை எப்படி சொல்வது.? தமிழிலோ அல்லது ஏதாவது ஒரு ஒட்டுமொத்த மொழியிலோ அதற்கு ஈடான வார்த்தையை சொல்ல முடியுமா? முடியாது. ஒரு போதும் முடியாது என்பதை அடித்து சொல்வேன்.

காதலித்த போதும் சரி.. திருமணத்துக்கு பிறகும் சரி..! எத்தனையோ சமயங்களில் என்னவள் பொருத்து போக எனது அவசர கோபம் அவளை கண்டபடி பேசிவிடும். அதற்கு நான் கோபத்தின் மீது பழி போட விரும்பவில்லை. நானே...! நானே காரணமாகினேன். திருமணம் ஆன முதல் தாய் வீடு தந்தை வீடு என்று சொல்லிகூட ஒரு நாளேனும் அவளை பிரிந்தது இல்லை. வருடங்கள் கடந்த ஒரு நாள் அவளது தாய் வீட்டிற்கு அவசர காரியமாக ஒரு வாரம் சென்றாள். அவளோடு என்னால் போக முடியாத சூழல்.

அப்போது புரிந்தது. அப்போது தெளிவாக புரிந்தது. நான் இல்லாமல் அவளால் தனியாக செயல்பட முடியாது என்றிருந்தேன். அது தவறு...! அவள் அவளாக இல்லாமலே என்னை இத்தனை நாளாக ஆட்டுவித்திருக்கிறாள் என்பதை உணர்ந்தேன். நான் தான் முற்றிலுமாக அவளை நம்பி இருக்கின்றேன். அவள் அல்லாது ஒரு வாழ்வை என்னால் நினைத்து கூட பார்த்திட முடியாது, அவளை திட்டுதலோ, அவள் மீது கோபம் கொள்ளுதலோ கூடாது என்று முடிவெடுத்தேன். என் தேவதை அவளை ரசிக்க ஆரம்பித்தேன். அவள் தவறிழைக்கும் போது கூட ரசிக்க ஆரம்பித்தேன். என்ன ஒரு அழகு அவள்...! எனக்காகவே என்னை தேடி வந்தாலோ..!!?

திருமணத்தின் போது ரச்சு பொருத்தம் இல்லை... அந்த பொருத்தம் இல்லை.. அன்னோன்யம் இருக்காது.. குழந்தை பேறு இருக்காது என்று என்னென்னவோ நடந்த்தே... அதெல்லாம் எனக்கு இப்போது எங்களை பிரிக்க செய்த மாய சதி போல தான் கண்ணில் தெரிகிறது. இன்னும் என்ன சாதிக்க இல்லை..!? அவளுக்காக இன்னும் என்ன என்னவோ சாதிக்க இருக்கிறது.

அவள் இல்லாமல் நானில்லை என்பதை உணர்ந்து வருடங்கள் கடந்தன. நேற்று முன்தினம் 9ம் தேதி அவளுக்கு பிறந்தநாள். என் தேவதைக்கு வாயால் மட்டுமல்லாது உணர்வாகவும் உன்னதமாகவும் பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்தேன். இப்பொழுது எழுத்திலும்...!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்மணியே............!

--
ஷோ.ரா.

Saturday, 5 May 2012

விட்டத்த பாத்ததுல வந்த சிந்தனை..!

உங்க பாதை என்னைக்குமே தவறா போகாதுனு நெனச்சுட்டு இருக்குற கனவான்களே..! உங்க செயல் என்னைக்குமே சரியானது தான்னு நினைக்கிற நல்லவங்களே! அடுத்தவர்களை நொட்டம் சொல்லும் உத்தமர்களே..!என்ன யோசிக்கிறீங்க..? இந்த மாதிரி மனிதர்கள் எங்க இருக்காங்கனு கேக்குறீங்களா.? அட அது நீங்க தாங்க.


இந்த மாதிரி ஆட்கள் எங்க அதிகமா இருக்காங்கனு தெரிஞ்சுக்கணுமா.? உங்க பக்கத்துல கொஞ்சம் இடமும் வலமும் புறமும் திரும்பி பாருங்க எல்லாம் அவுங்களா தான் இருப்பாங்க.

நான் இந்தமாதிரி ஆட்கள எங்க பாத்தேன்னு தெரிஞ்சுகிணமோ...! சொல்றேன்.. சொல்றேன்...! காலையில டிரெயின்ல போகும் போது செங்கல்பட்டுல ஏறி தாம்பரத்தல ஏறுர ஆளுக்கு இடம் புடிச்சுட்டு வர்ற பெரியவரு, குட்டி சுவத்துல உக்காந்துட்டு பொண்ணுங்க இல்லாத சமயத்துல உலக அரசியல் பேசுற சிறுசுங்க இப்படி நான் எங்க போனாலும் இது மாதிரி ஆட்கள் மட்டும் தான் தெரியுறாங்க. இது என்னோட தப்பா.. இல்ல உண்மையிலே அவுங்க மேல தான் தப்பானு பல சமயம் நான் குப்புற படுத்து யோசிச்சிருக்கேன். ஒரு வேலை நிமிர்ந்து படுத்து யோசிச்சுருந்தா கரெக்டா யோசிச்சிருப்பனானு தெரில. ஆனா குப்புற படுத்ததுல தூக்கம் மட்டும் தான் வந்துச்சு சிந்தனை வரல.

அப்படி என்ன தாங்க பண்ணுறாங்க.. முட்டி மோதிகிட்டு டிரெயின்ல நின்னுகிட்டு இருப்போம். பக்கத்துல ஒரு சீட் காலியாகும். உக்காரலாம்னு கால நகர்த்துவோம்... எட்டிகிட்டு முட்டிகிட்டு ஒருத்தரு வந்து நம்மல தள்ளி விட்டுட்டு இம்சை பண்ணுவாரு பாருங்க. அட பாவம்.. என்ன அவசரமோ ஏதோன்னு பிடறி தட்ட, நாம தலை காலு புரியாம தெரிச்சு நிக்கும்போது அந்த சீட்ல ஒய்யாரமா இடம் புடிச்சு உக்காருவாரு. ஏன்யா இந்த சீட்ட புடிக்கவாயா என் நேரா இருந்த வாயா ஓரமா ஒதுக்கி வக்கிற போல குத்துன்னு கேக்க தோணும். ஆனா நாங்கலாம் படிச்ச நாகரீகம் தெரிஞ்ச ஆளுங்கல. எப்படி கேபபோம்.. வாய மூடிகிட்டு கீழ விழுந்தாலும் முட்டிக்காலு கீழ படாத மாதிரி பில்டப் கொடுத்துட்டு நிப்போம்ல. பாவம் நாம கத்த போயி மடங்குற ஏதோ ஒரு பொண்ணும் மடங்காம போயிட்டா என்ன பண்றது.

இப்படி இருக்குறதுக்கு பெயரு நாகரீகம். எதிருல ஒருத்தன் உக்காந்தா சிலருங்க என்னா செய்வானுங்க. பேசுவாய்ங்க.. ''அட... உலகத்துல.. எவனுக்கு தான் பொருப்பு இருக்கு.. எவன் தான் சரியா நடந்துக்கிறாங்க. அரசியல்வாதிகள மாத்துனா சரியா போயிடும்னு'' பேசிகிட்டே ரெண்டு பேருக்கு நடுவுல கொஞ்சம் கீழ குனிஞ்சு எச்சில துப்பிட்டு திரும்ப குத்தம் சொல்லுற வேலைய பாக்க ஆரம்பிப்பாய்ங்க.

அட என்னதான் யா நடக்குது இங்க.. அவனே ஒழுங்கா இல்லையே..! அப்பரம் எதுக்கு அரசியல்வாதிய குறை சொல்றான்னு நீங்க கேக்குறது புரியிது. இப்ப நான் கேக்குறன்.. நீங்க ஒழுங்கா இருக்கீங்களா.. அவன எதுக்கு நீங்க குறை சொல்றீங்க. சரி.. நான் ஒழுங்கா இருக்கேனா..? நான் ஏன் உங்கள குறை சொல்லுறேன்...!? அட போங்கப்பா.. எ்னக்கு குறை மட்டும் தானே சொல்ல தெரியும். .. .. சிரிக்காதீங்கப்பா.. நீங்க மட்டும் ஒழுங்கா.? உங்களுக்கும் குறை மட்டும் தானே சொல்ல தெரியும்.

இன்னொரு சாரர் சிறுசுங்க இ்ருக்காங்க. வீட்டுக்கு நடந்து போகும் போதெல்லாம் பாப்பேன். அந்த குட்டி செவுத்துல உக்காந்துகிட்டு. இந்த அரசியல்வாதிகளே இப்படி தான் பான்னு சொல்லி ரொம்ப கொதிச்சு போயிருப்பாங்க. அவுங்க மொகத்துல ஒரு வெறி தெரியும். அந்த வெறி என்னன்னு கேக்குறீங்களா..? பார்ல சரக்கு வெலையெல்லாம் ஏத்துறாங்களாம்... பொண்ணுங்களுக்காக தனி டிரெயின் உடுறாங்களாம்... டே.. டே.. டே... எதிர்காலம் எவ்வளவு ப்ரைட்டா தெரியுது பாருடா எனக்கு...! ரொம்ப சந்தோசமா இருக்குடா யப்பா. அவுங்க பேசினதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு கேக்கறீங்களா.. ஒட்டு கேட்டேங்க. யாரு.. யாரு.. யாரு அங்க குதிக்கிறது. தம்பி.. நான் யோக்கியன் இல்லீங்க. நான் உத்தமன் இல்லீங்க.

டே.. ஓவரா போகுது.. இப்ப என்னதான் சொல்ல வர்றன்னு கேக்குறீங்களா..!!? அதாங்க.. எனக்கும் தெரியல. ஏதோ சொல்ல வர்றேன்னாச்சும் உங்களுக்கு புரிஞ்சுருக்கே. எனக்கு அதுவே தெரியலங்க. லூசுடா இவன்னு சொல்லுறது யாருங்க.. அப்படியா.. நான் லூசாகிட்டனா.. அய்யா ஜாலி.. ஜாலி.. உங்க கூடல்லாம் குப்பைய கொட்டுறதுக்கு மனம் நலம் பாதிக்கப்பட்டு எதுவுமே தெரியாம இருக்குறதே பெட்டரு. யப்பா...!

--
ஷோ.ரா.

Sunday, 29 April 2012

தமிழக அரசியல்- தேர்ந்தெடுக்கும் முட்டாள்கள்

இங்கு இல்லாவிடில் அங்கு..! அங்கு இல்லாவிடில் இங்கு..! அடடே.. இவன் சரியில்லை. அடடே அவன் சரியில்லை..! என்று பொலம்பி பொலம்பி செக்கு மாடு போல இருவரை மட்டுமே சுத்தி வந்த தமிழக அரசியலில் நார பொழப்பு யாருக்கு என்றால் அடித்து சொல்லுவேன் அது தமிழக மக்களுக்கு தான்.

தவளை தன் வாயால் கெடும்..! யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும். சரி...! தமிழன் என்ன செய்வான்..? தேர்தல் வரும் சமயத்தில் தன்னையே ஒரு ராஜாவாக கருதிக்கொண்டு. நேர்மை, கண்ணியம் என்று தன்னை தானே பெருமையாக எண்ணிக்கொண்டு-சரியான நேரத்தில், மிகச்சரியாக ஒரு தவறை செய்துவிடுவான். அதுதான்-பிரதிநிதியை சிறப்பாக தேர்ந்தெடுத்திடுவான்.

வயதானவருக்கு அவர் இஷ்ட கட்சியையும் தலைவனையும் விட மனசில்லை. நடுத்தர வயதினருக்கு எந்த கட்சிக்கும் விருப்பமில்லை அதனால் தேர்தல் நாளும் அவனுக்கு ஒரு சாதாரண நாளே..! இளங்கன்றுகளுக்கு எப்போதுமே அப்போதையே ஆட்சிமுறை புடிக்காது. எனவே எதிர்கட்சிக்கு தான் ஓட்டு. இப்படியே போய்கொண்டு இருந்தால். ஊர் உலகத்தில் சொல்வதற்கென்று ஒண்ணுமில்லாமல் போய்விடும்.

ஒன்று ஆளுமை-மற்றொன்று எதிர்மை. இவை இரண்டையும் கடந்து இன்னொன்று பிறக்குமா என்பது தெரியவில்லை. பிறந்தாலும் அவை எந்த பாதைக்கு அழைத்து செல்லும் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

இப்போது தமிழக ப்ரச்சனைகள் என்று குமுறிக்கொண்டிருக்கும் வயதானவர்களே...! உங்க இஷ்ட கட்சியும் தலைவியும் தானே சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கு அழுது புலம்ப கூடாது. துடைத்துக்கொள்ளுங்கள். அட.. அதுதான்.. அந்த ஓரமாக ஒழுகிறதே அந்த கண்ணீரை துடைத்துக்கொள்ளுங்கள்.


அட.. அங்கு யாரு காச்சு மூச்சென்று கத்திக்கொண்டிருப்பது. ஓ.. ஓட்டுபோட உத்தமர்களோ.! உங்களுக்கு யார் உரிமை கொடுத்தார் கத்துவதற்கு. எப்போது ஓட்டுபோடுவதை விட்டுவிட்டீர்களோ அப்போதே நீங்கள் இந்தியன்-தமிழன் என்னும் அருகதையை பெற தகுதி அற்றீர்கள். எனவே தமிழகத்தில் நடக்கும் கோரங்களை கண்டு வாயை பொத்திக்கொண்டு போங்கள். உங்களுக்கு இதை எதிர்த்து கேட்க ஒரு துளி உரிமை கூட கொடுக்கப்படவில்லை. நீங்கள் ஓட்டுபோடாதது கூட இந்த அவதிக்கு ஒரு காரணம் என்று சொல்லிட முடியும். எனவே, நீங்கள் செய்த தவறுக்கு நாங்கள் அனுபவிக்குறோம். பொத்திக்கொண்டு வேலையை பாருங்கள்-தாம் தூம் என்று கத்தாமல்.

அந்த முக்குல வியாக்கானம் பேசுற இளசுகளே..! இவன் சரியில்ல.. அவன்.. அவன் சரியில்ல இவன்.. இப்படி சொல்லியே தமிழகத்துல 30 வருசம் இருண்டுபோச்சு. புதுசா வர்ற நீங்களாவது கொஞ்சம் யோசிக்கணும். யோசிக்காம மாற்றம் வரணும்னு நினைக்காம கண்மூடி தனமா கேவலமா நடத்துகிட்டு இப்ப என்ன பேச்சு வேண்டி கெடக்கு.

ஆக மொத்தம்.. நடக்குற எல்லாத்துக்கும் நாம தான் காரணம். இனிமே எவனாச்சும் எவனயாச்சும் திட்டுனீங்க.. பண்ணுணீங்கல அனுபவிங்க.!!

.
.
.
''டே டே... பதிவு போடுறேன்ல.. எவன்டா கரண்ட கட் பண்ணினது... அவன.. *%&$&&$&**&$*&%&%&@$@$#@#%$%$&''

வாழ்க்கைய எண்ணி எண்ணி சிரிக்கிற போல ஆகிடுச்சே.............!

---
ஷோ.ரா.